Sunday 23 September 2012

ஒரு கப் பால் - உண்மைக் கதை!

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

"கொ... கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?" தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு காப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்... "நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?"

"கடனா... அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்." அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

"ரொம்ப நன்றி..." சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட  பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

"இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!"

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல... அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

------------------------------------------------------------------------
நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)


பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

[END]

3 comments:

  1. Very good true story. We must say this type of story in our children.Keep it up.

    ReplyDelete
  2. நல்ல பதிவு...பிறருக்கு உதவேண்டும் என்ற என்னத்தை தூண்டும் இந்தபதிவை நான் என் நண்பர்களுக்கு அனுபயுள்ளேன்...நானும் அதன்படி நடக்க முயற்சி செய்வேன்...
    .
    மாரீஸ் கண்ணன்

    ReplyDelete
  3. Very Nice...As Always Our Tiruvalluvar Tirukural is a Treasure for us

    ReplyDelete