Thursday 18 October 2012

RightMantra.com website is ready!

ண்பர்களே, நமது RIGHTMANTRA.COM தளம் தற்போது தயாராகிவிட்டது. இனி அனைவரும் அங்கு வந்து நமது பதிவுகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பிளாக்ஸ்பாட்டில் அப்டேட்டுகள் எதுவும் இருக்காது. இனி இது RIGHTMANTRA.COM தளத்திற்கு ஸ்டாண்ட்பை (பாதுகாப்பான மாற்று) தளமாக செயல்படும். 


ஒருவேளை அந்த தளத்தில் ஏதாவது பிரச்னை, உங்களால் பார்க்க முடியவில்லை அல்லது DOWNTIME என்றால் இங்கு வந்து பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

RIGHTMANTRA.COM தளம் திக்கெட்டும் பரவி, மன இருளை அகற்றி ஆன்மீக ஒளியை பரவச் செய்ய, என் எளிய பணியில் துணை நிற்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி!!

சுந்தர்,
RightMantra.com
E-mail: simplesundar@gmail.com
Mobile : 9840169215

Tuesday 16 October 2012

கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!!

ந்த தளத்தில் 'ஆலய தரிசனம்' பகுதிக்கு இது ஒரு தொடக்கம் தான். அடுத்தடுத்து நமது ஆலய தரிசனங்கள் குறித்த அனுபவப் பதிவுகள் (புகைப்படங்களுடன்) வரவுள்ளன. இந்த தொடக்கப் பதிவில் மனதில் உள்ளவற்றை வடித்திருக்கிறேன். இவற்றை சீர்படுத்தி தேவையில்லாதவற்றை தவிர்த்து, இன்னும் 
சுவாரஸ்யமாக சுவையாக எழுதக் கூடிய நடை போகப் போகத் தான் கைகூடும் என்று நினைக்கிறேன். இந்த பதிவு மற்றும் நடை குறித்த உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் மகிழ்ச்சியடைவேன்.

இந்த பதிவின் நோக்கமே இதை படிக்கும் உங்களுக்கும் இத்தகைய செயல்களை செய்யவேண்டும், கோவில்களுக்கு செல்லவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதற்கு தானே தவிர, வேறு எதுவும் அல்ல.



-------------------------------------------------------------------------------------------------------------
ஸெளர பேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதிக்ருண்ணம்த்விமம் க்ராஸம்
காவஸ்த்ரைலோக்ய மாதர:!!
பொருள்: காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை அருள்பவளே! தூய்மையானவளே! புண்ணிய வடிவானவளே! மூவுலகத்திற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்தப் புல்லைப் பெற்றுக் கொள்வாயாக.
-------------------------------------------------------------------------------------------------------------
 

ஹாளய அமாவாசையின் சிறப்பு பற்றிய பதிவை ஞாயிற்றுக்கிழமை எழுதும்போதே, திங்களன்று அதாவது அமாவாசை தினத்தன்று நான் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுத்துவிட்டேன்.



வீட்டில் அப்பா தன் தாத்தாவுக்கும் அவர் முன்னோர்களுக்கும் முறைப்படி செய்ய வேண்டிய சிரார்த்தத்தை செய்துவிடுவார் என்பதால் அதை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணிய போது நான் போக முடிவெடுத்தது அருகில் உள்ள திருவேற்காடு. (சுமார் 5 கி.மீ.).

காரணம், திருவேற்காட்டில் இருக்கும் தொன்மையான சிவாலயம் மற்றும் வழியில் உள்ள ஒரு கோ-சாலை. (பசு காப்பகம்!).



ஏற்கனவே அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டிருந்தபடியால் எந்த விதம் அவசரமும் இல்லாமல், காலை திருவேற்காடு கிளம்பினேன். எங்கள் பகுதியில் உள்ள காய்கறிக்கடை ஒன்றில் சுமார் 10 கட்டுக்கள் அகத்திக்கீரைகளை வாங்கினேன்.


அடுத்த சில நிமிடங்களில் டூ-வீலரில் திருவேற்காடு பயணம்.

திருவேற்காடு செல்லும் வழியில் உள்ள பெருமாள் அகரத்தில் உள்ள கோ சாலைக்கு சென்றால், அங்கே கூட்டமோ கூட்டம் அப்படியொரு கூட்டம்.

பண்டிகை மற்றும் விசேஷ நாள் என்றால் இந்த பசு காப்பகத்தில் கூட்டம் அலைமோதும். கோ பூஜை செய்ய ஒரு முறை இங்கு சென்றிருக்கிறேன். ஆகையால் பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்கவேண்டும் என்று எண்ணிய போது இந்த இடம் உடனே மனதில் தோன்றியதில் வியப்பில்லை.


வயதான, கறவை நின்றுபோன, கசாப்பு கடைகளுக்கு செல்லும் பசுக்களை மீட்டு கொண்டு வந்து இங்கு பராமரிக்கின்றனர். தவிர விசேஷ நாட்களில் கோ தானம் செய்பவர்கள் அளிக்கும் நல்ல ஆரோக்கியமான பசுக்களும் இங்கு உண்டு.

காப்பகத்துக்கு வெளியே வரிசையாக சாலை ஓரங்களில் கார்கள் அணிவகுத்து நின்றிருந்தன. அப்பொழுதே புரிந்தது. வசதிமிக்கவர்கள் திரளாக கோ-பூஜை மற்றும் கோ-தானத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று.


இன்றைக்கு மேற்படி செல்வந்தர்கள் பசுக்களுக்கு தீவனங்களை அள்ளிக் கொண்டு வந்து கொட்டியிருப்பார்களே... குசேலன் அவல் கணக்காக நான் கொண்டு செல்லும் சில கட்டு அகத்திக்கீரைகளுக்கு என்ன மதிப்பிருக்கப்போகிறது என்று நினைத்துக்கொண்டேன். இருப்பினும், எதற்கும் உள்ளே சென்று பார்த்துவிடுவோம்.


கீரைகளை கொடுக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை, பசுகொட்டிலில் காலையாவது வைத்துவிட்டு வந்துவிடுவோம் என்று எண்ணி உள்ளே சென்றேன். (பசுவின் கால் தூசி படுவது கங்கையில் குளிப்பதற்கு சமம்!) இரண்டாவது பசுக்கொட்டிலில் செய்யப்படும் பிரார்த்தைனைகள் மற்றும் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பன்மடங்கு பல தரக்கூடியவை. சக்திமிக்கவை.


கேட்டை திறந்து உள்ளே சென்றால், எள் போட்டால் எள் எடுக்க இடமில்லை என்னுமளவிற்கு ஒரே கூட்டம். அதாவது பசுக்கள் கட்டப்பட்டிருக்கும் கொட்டிலுக்கு முன்பாக உள்ள வராண்டா போன்ற இடம் அது. சுமார் 20 பேர் மட்டுமே நிற்கக் கூடிய அந்த இடத்தில் 100 பேர் இருந்தனர். நான் சென்றிருந்த சமயம், கண்ணன் பட்டாச்சார்யா வந்திருந்தார். (இவர் தினமும் காலை ஜீ - தமிழ் தொலைக்காட்சியில் அருளோசை நிகழ்ச்சியில் வருவார்.)

அநேகமாக கோ-தானம் செய்பவர்கள் எவரேனும் பூஜைக்காக அவரை அழைத்துவந்திருக்கவேண்டும். அல்லது காப்பகமே அவரை இன்றைக்கு பூஜைகளுக்காக அழைத்து வந்திருக்கவேண்டும்.
























ஒரு பக்கம் கோ-பூஜை, மறுபக்கம் கோ-தானம் என்று எங்கெங்கு பார்க்கிலும் வேதம் மந்திர முழக்கங்கள் தான்.

கூட்டத்தை விலக்கி உள்ளே சென்று, மெயின் கொட்டகை கேட்டை அடைந்தேன். கொட்டகையின் உள்ளேயும் கூட்டம். அங்கும் ஒரு பசு + அதன் கன்றுக்கும் சேர்த்து கோ பூஜை நடந்துகொண்டிருந்தது. காவலாளி கோ-தானம் அளித்தவர்களையே உள்ளே விட மறுத்துக்கொண்டிருந்தார். "உள்ளே போனவங்க முதல்ல வெளியே வரட்டும். அப்புறம் நீங்க உங்க பூஜைக்கு உள்ளே போகலாம். அங்கே போய் எங்கே நிப்பீங்க? அந்த பக்கம் ஃபுல்லா மாடுங்க நின்னுக்கிட்டுருக்கு. அதான் சொல்றேன்" என்று அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை கொடுக்க வந்திருப்பதாக கூறினேன். கையில் இருந்த கட்டுக்களை காண்பித்தேன். என்ன நினைத்தாரோ என்னை உள்ளே அனுமதித்தார். ஏதோ அயல்நாட்டு விசா கிடைத்த மாதிரி எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்.


உள்ளே சென்று கட்டுக்களை பிரித்து, கீரையை கொடுக்க ஆரம்பித்தேன். பசுக்கள் நான் கொடுப்பதற்கு முன்பாக அவற்றை பிடித்து இழுத்து போட்டி போட்டு உண்டது, கண்கொள்ளா காட்சி. இங்கு சில பசுக்கள் சாப்பிடும்போது அவர்களுக்கு அடுத்த வரிசையில் உள்ளவைகளும், "ஏய்... எனக்கு... எனக்கு" என்று தலையை கயிற்ருடன் சேர்த்து இழுத்து இழுத்து திமிறிக்கொண்டு சைகை காட்டின.

"இதோ வர்றேன் .. இதோவர்றேன்... அவசரப்படாதீங்க" என்று கூறிக்கொண்டே ஒவ்வொரு பசுவாக கீரைகளை பிரித்துக்கொடுத்தேன். இப்படியே ஓரளவு எல்லா பசுக்களுக்கும் கொண்டு சென்ற கீரைக்கட்டை பிரித்து கொடுத்தாயிற்று.


பசுக்களுக்கு கீரை கொடுப்பதை பார்த்து, கடைசி வரிசையில் நின்றிருந்த சில எருமைகளும் கீரைகளை கேட்டு ரகளை செய்ய, அதுங்க மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு... என்று அவற்றுக்கும் பாரபட்சம் பார்க்காமல் கொடுத்தேன். பின்னர் பராமரிப்பவர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது, பசுக்களை ஏற்றிக்கொண்டு கசாப்புக்கடைக்கு செல்லவிருந்த ஒரு வண்டியை மீட்டபோது, அவர்களுடன் இந்த எருமைகள் சிலவும் இருந்தனவாம். அவற்றையும் மீட்டு வந்திருக்கிறார்கள். கொடூர மரணத்திலிருந்து எமனின் வாகனத்தையே மீட்டு வந்திருக்கிறார்கள். நல்ல விஷயம் தான்.

உள்ளே நின்ற அந்த அரைமணி நேரம் பல பசுக்கள் கோமியங்களை கழிப்பதும் சாணங்கள் போடுவதுமாக இருந்தன. ஆனால் ஒரு சின்ன நாற்றம் அடிக்கவேண்டுமே... ஒரு சின்ன சத்தம் கேட்கணுமே... ஹூம்...ஹூம்... அது தாங்க பசுமாடு. (பசுவுக்கென்று தனி சிறப்புகள் உண்டு. படித்தால் வியந்து போவீர்கள். அதை தனிப் பதிவாக பின்னர் தருகிறேன்!).

இப்படி பசுமாடுகளுக்கு அகத்திக் கீரைகளை கொடுத்தபின்னர், அவற்றின் முன் வீழ்ந்து வணங்கிவிட்டு, வெளியே வந்தேன்.


திருவேற்காடு வேதபுரீஸ்வரர்

ஆடனாக மசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே.  - திருஞானசம்பந்தர்

பொருள் : ஆடுதற்குரிய பாம்பினை இடையிற்கட்டிய, அளவற்ற பல்வேறு வடிவங்களைக் கொண்டருளிய திருவேற்காட்டு இறைவனைப்பாடிப் பணிந்தவர்கள், இவ்வுலகினில் பெருமை பொருந்திய செல்வர்கள் ஆவர்.

 

அடுத்து நேரா நம்ம பயணம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில். திருவேற்காட்டுக்கு பெயர் காரணமே அங்கே இருக்கும் சிவன் கோவில் தான். காலப்போக்கில் கருமாரியம்மன் ஆலயம் ஃபேமஸாகிவிட்டது.\

கோவிலை அடைந்தவுடன் அர்ச்சனை பொருட்கள் + ஒரு ஜோடி விளக்கும் வாங்கிக்கொண்டு உள்ளே போனேன்.

உள்ளே வேதபுரீஸ்வரர் அற்புதமான அலங்காரத்தில் இருந்தார். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்துணை அழகு. பின்னால் இறைவனின் திருக்கல்யாணக் காட்சி சிற்பத்தை விஷேட அலங்காரம் செய்திருந்தார்கள். அது இன்னும் அழகு.

(இந்தக் கோவிலோட விசேஷமே அது தான். விரிவானக தகவல்களுக்கு http://www.shivatemples.com/tnaadut/tnt22.php பார்க்கவும்.)

அர்ச்சனை முடிந்தபிறகும் கூட அந்த இடத்தை விட்டு நகர மனமில்லாமல் நின்றுகொண்டிருந்தேன். ஒரு வழியாக தரிசனம் முடிந்த பின்னர், பிரகாரத்தை வலம் வரும்போது, கதிரவனின் ஒளிக்கதிர்கள் கருவறைக்கு பக்கவாட்டில் வெளியே விழும் காட்சி பார்க்க அத்துணை ரம்மியமாக அசத்தலாக இருந்தது. (பார்க்க புகைப்படம்!)


பிரகாரத்தை சிவநாமத்தை கூறியபடி சுற்றி வந்து, அம்பாளை தரிசித்துவிட்டு, நவக்கிரகங்களை வலம் வந்து பின்னர் தரிசனத்தை நிறைவு செய்தேன்.
கொடிமரத்தின் கீழே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு நிமிர்ந்தேன். எதிரே ஒரு அம்மாவும் மகனும் ஒரு பக்கெட்டில் தயிர் சாதம் கொண்டு வந்து அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். எனக்கும் ஒரு தொன்னை நிறைய இஞ்சி, கருவேப்பிலை போட்ட தயிர் சாதம் கிடைத்தது. அடடா நமக்கு இது தோணாம போச்சே என்று நொந்துகொண்டேன். அடுத்த முறை ஏதாவது விசேஷம் வரும்போது செய்துடலாம் என்று எண்ணிக்கொண்டு சாப்பிட்டவுடன் கிளம்பிவிட்டேன்.



வெளியே வந்தேன். கோவில் குளம் மிகவும் ஈர்த்தது. கோவிலையும் முருகப் பெருமான் உருவாக்கிய குளத்தையும் ஒருங்கே ஒரு நல்ல ANGLE தேர்வு செய்து படம்பிடித்தேன்.


நல்ல நாள் அன்று நல்ல விஷயம் செய்த திருப்தியும், வேதத்திற்க்கே  தலைவனான வேதபுரீஸ்வரரையும் தரிசித்த திருப்தியுடன் வீடு திரும்பினேன்.

[END]








Sunday 14 October 2012

மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் - அரிதினும் அரிய உண்மைகள்!


ஹாளய அமாவாசை பற்றியும் அதன் சிறப்பு பற்றியும் சொல்லிகொண்டே போகலாம். பொதுவாகவே அமாவாசை தினத்தை மிகவும் புனிதமாக கருதுவர். ஆகையால் தான் அதற்க்கு 'நிறைந்த நாள்' என்ற பெயரும் கூட உண்டு.
நாம் நிம்மதியாகவும் சந்தோஷமாகும் எவ்வித குறைகளும் இன்றி நலமுடன் வாழ, இல்லறம் தழைக்க, நமது முன்னோர்களின் (பித்ருக்களின்) ஆசி மிக மிக அவசியம். அவர்களுக்கு செய்ய வேண்டிய சாஸ்திர மத ரீதியிலான சம்பிரதாயங்களை புறக்கணித்துவிட்டு, நீங்கள் என்ன தான் புண்ணிய காரியங்கள் செய்தாலும், கோவில் கோவிலாக சுற்றினாலும் அது பலன் தராது. காரணம், நீங்கள் செய்யும் சிரார்த்தம் உள்ளிட்ட சடங்குகள் மற்றும் அவரவர் வழக்கப்படியிலான சம்பிரதாயங்கள் மூலம் தான் அவர்களுக்கு மேல் உலகத்தில் கிடைக்கவேண்டிய உணவும், நீரும் கிடைக்கும். நீங்கள் அவற்றை செய்யாது தவிர்க்கும்போது பசியாலும் தாகத்தாலும் வாடும் அவர்களின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும்.

பலரின் வீடுகளில் வசதியிருந்தும், தகுதியிருந்தும் சுபகாரியத் தடைகள் ஏற்படும் காரணம் இந்த பித்ரு சாபம் தான். 

அப்படிப்பட்டவர்கள், இந்த நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கடைசி நேரத்தில் சொன்னா நான் என்ன பண்ணுவேன் என்று எவரும் கலங்க வேண்டியதில்லை. கீழே தரப்பட்டுள்ள முழு கட்டுரையையும் படியுங்கள். உங்களால் முடிந்தவற்றை செய்யுங்கள் அடுத்த முறை, நன்கு திட்டமிட்டு மனநிறைவோடு செய்யுங்கள். பலன் பெறுங்கள்.

இன்றைய தினத்தந்தியில் வெளியாகியிருக்கும் மிக மிக அற்புதமான கட்டுரை இது. படியுங்கள். பயன்பெறுங்கள்.

மஹாளயம் என்னும் மகத்தான் நாள் !

இறந்த நம் முன்னோர்களை நினைவு கூறும் நாள் அமாவாசை. முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பிழைகள் மற்றும் தீயச் சொற்களுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் இந்த நல்ல நல்ல நிலைக்கு உயர்ந்ததர்க்கு நன்றி சொல்வதற்கும் ஒவ்வொரு அமாவாசை அன்று முன்னோருகளுக்கு (பித்ருக்களுக்கு) வழிபாடு செய்கிறோம்.

பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு உணவு கொடுப்பது போலவும், அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.

மஹாளய பட்ச அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான காலகட்டத்தை மஹாளய பட்சம் என்கிறோம். இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களான தாத்தா, பாட்டி ஆகியோர் மேல் உலகத்தில் இருந்து அமுது பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்.

இந்த நாட்களில் தினமும் அன்னதானம் செய்யவேண்டும். தினமும் செய்ய முடியாதவர்கள் தம் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் புரட்டாசி மாத அமாவாசை அன்றாவது அன்னதானம் செய்யலாம். வசதியிருந்தால் திருவண்ணாமலை போன்ற கோவில்களில் அன்னதானம் செய்யலாம். இதுவும் முடியாவிட்டால் பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப் பழங்கள் கொடுக்கலாம்.

பித்ருக்களுக்கு விசேஷ தினம்

பித்ரு பூஜைகளை மனப்பூர்வமாகவும் உள்ளன்போடும் செய்யவேண்டும். அதனால் தான் இறந்தவர்களுக்காக செய்யப்படும் பொது அமமாவாசை சிரார்த்தம் என்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் சூரியனின் தென்பாகம் நடுப்பக்கம் பூமிக்கும் நேராக நிற்கிறது. அப்போது சந்திரனின் தென்பாகமும் நேராக நிற்கிறது. இந்த தருணமே பித்ருக்களுக்கு விசேஷ தினமாகும்.

7 தலைமுறைகளுக்கு மரபணுக்கள்

மனித மரபணுக்களில் 84 அம்சங்கள் உள்ளன. அதில் 28 அம்சங்கள் தாய், தந்தை உட்கொள்ளும் உணவில் இருந்து உண்டாகிறது. மீதமுள்ள 56 அம்சங்கள் அவனது முன்னோர்கள் மூலம் கிடைக்கிறது. குறிப்பாக தந்தையிடம் இருந்து 21 அம்சங்களும், பாட்டனாரிடம் இருந்து 15 அம்சங்களும், முப்பாட்டனாரிடமிருந்து 10 அம்சங்களுமாக 46 அம்சங்கள் கிடைக்கின்றன. மீதமுள்ள 10 அம்சங்களில் நான்காவது மூதாதையரிடமிருந்து 6 -ம், ஐந்தாவது மூதாதையரிடமிருந்து 3 -ம், ஆறாவது மூதாதையரிடமிருந்து 1 -ம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன. 7 தலைமுறைக்கு மரபணுக்கள் தொடர்பு உள்ளது.

இதனால் தான் தலைமுறை 7 என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதிகமாக தங்கள் அம்சங்களை கொடுப்பவர்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டனார் என்பதால் சிரார்த்தத்தில் இவர்கள் பெயரை மட்டும் சொல்லி பிண்டம் கொடுக்கிறார்கள். இதில் சிரார்த்தம் செய்பவர் மனமும் பெறுபவர் மனமும் ஒன்று படுவதால் அதன் பலன் கிட்டுகிறது.

பித்ரு பூஜைகளை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்தாலே போதும். அதனால் பித்ருக்கள் மிகுந்த திருப்தி அடைந்து உளம் கனிந்து ஆசி வழங்கி மகிழ்கிறார்கள். அன்னதானமும் தீப வழிபாடும் பித்ருக்களின் மகிழ்ச்சியையும் அதனால் சிறப்பான ஆசியையும் பெற்றுத் தரும்.

சூரியோதய நேரத்தில் அமாவாசை

தர்ப்பைப் புல்லை ஆசனமாக வைத்து அதில் பித்ருக்களை எழுந்தருளச் செய்து, எள்ளும் தண்ணீரும் தருவதை தர்ப்பணம் என்கிறோம். திவசத்தின் பொது இங்கே நாம் கொடுக்கின்ற எல், தண்ணீர், பிண்டம் முதலானவைகளை பித்ரு தேவதைகள், நம் மூதாதையர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கு ஏற்ப ஆகாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்கிறது.

சூரிய, சந்திரர்கள் 12 டிகிரிக்குள் ஒருங்கிணையும் நாள் தான் அமாவாசை ஆகும். இந்த ஆண்டு நாளை திங்கட்கிழமை காலை சூரியோதய நேரத்தில் அமாவாசை இருப்பது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. 'அமாசோமவாரம்' என்று கூறப்படும் இந்த நேரத்தில் அரசமரத்தை வளம் வருவது நன்மை பயக்கும். அரசமரம் பிரம்மா, சிவன், விஷ்ணு, ருத்ரன், என்னும் மும்மூர்த்திகளில் சொரூபமாக சிறப்பித்து சொல்வார்கள். மஹாளய அமாவாசையான நாளைய தினம் பித்ருகளுக்கு நன்றிக் கடன் செலுத்தி வாழ்க்கையில் உயரலாம்.

(நன்றி: தினத் தந்தி 14/10/2012)

Friday 12 October 2012

சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் அனைவரிடமும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி…. சினிமா நட்சத்திரங்களோ அல்லது எழுத்தாளர்களோ அல்லது தொழிலதிபர்களோ அல்லது விளையாட்டு வீரர்களோ யாராக இருந்தாலும் எந்த துறையை சேர்ந்த சாதனையாளர்களாக இருந்தாலும் சரி… கடவுள் நம்பிக்கை இருப்பவர்களானாலும் சரி… இல்லாதவர்களானாலும் சரி… அவர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்தார்ப்போல இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?……………. அதிகாலை எழுவது!

“Early to bed and early to rise, makes a man healthy wealthy and wise.” Benjamin Franklin

நீங்கள் வேண்டுமானால், உங்கள் வட்டத்தில் உள்ள உங்களுக்கு தெரிந்த மிகப் பெரிய சாதனையாளர் என்று நீங்கள கருதுபவர் எவரையாவது கேட்டுப்பாருங்களேன்… நிச்சயம் அவருக்கு அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும்.

உலகப் புகழ் பெற்ற பல தொழில்துறை ஜாம்பவான்கள் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள் இவர்கள் அனைவரும் அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் உடையவர்களே.

ஜெனரல் மோட்டார்ஸ் சி.இ.ஒ.  டான் ஆகர்ஸன், விர்ஜின் அமெரிக்கா சி.இ.ஒ. டேவிட் குஷ், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ. டிம் குக், ஆக்சிஜென் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ. கெர்ரி லேபோர்ன், யூனிலீவர் சி.இ.ஒ. பால் போல்மன், சிஸ்கோ நிறுவனத்தின் சி.டி.ஒ. பத்மஸ்ரீ வாரியர், பெப்சிகோ முன்னாள் சி.இ.ஒ ஸ்டீவ் ரெய்னி மன்ட் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் இயக்குனர்களும் அதிகாலை எழுபவர்களே.

கோடிகணக்கில் மாத ஊதியம் பெறும் இவர்களுக்கு நேரம் என்பது எத்துனை அறிய ஒரு விஷயம் என்று தெரியுமல்லவா? நம்மை விடவா அதிக நேரம் கிடைக்கபோகிறது?  ஆனால் அதிகாலை இவர்கள் எழுகிறார்களே எப்படி? ம்…  அது தான் வெற்றிக்கான சூத்திரத்தின் முதல் படி. அதிகாலை எழுந்திருப்பதன் அவசியத்தை வேத நூல்களும் இதிகாசங்களும் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன.

பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் படுக்கையில் இருந்து எழுதுவிடவேண்டும்.

அதிகாலையில் எழுந்திருக்கவேண்டுமானால் இரவு நாம் விரைவில் உறங்கச் செல்வது முக்கியம். ஆரோக்கியமான ஒரு உடலுக்கு தினசரி 6 அல்லது 7 மணி நேரம் உறக்கம் அவசியம். அதற்கு மேல் வேண்டியதில்லை.

காலை சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் 4.00  முதல் 5.00 க்குள் எழுந்துவிடவேண்டும். எழுந்தவுடன் நமது உள்ளங்கையை பார்ப்பதும், இறைவனின் திருவுருவப்படத்தை பார்ப்பதும் அவசியம்.

அதிகாலைச் சிறப்பு

சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு “கோதூளி’ என்று பெயர். அதிகாலைப் பொழுதை ஜோதிட சாஸ்திரம், “கோதூளி லக்னம்’ என்று பசுவின் பெயரால் குறிப்பிடுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை, மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, “பிரம்ம முகூர்த்தம்’ என்றும் குறிப்பிடுவர். கோதூளி லக்னத்தில் கோயில்களில் விஸ்வரூபதரிசனம் நடத்தி சுவாமிக்கு முன் கோபூஜை நடத்துவர்.

எனவே மேற்கூறிய நல்ல நேரத்தில் எழுந்தவுடன் நமது நாவிலிருந்து வரும் முதல் சொல், இறைவனின் நாமமாக இருக்கவேண்டும்.

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

எழுந்தவுடன் காலைக்கடன்களை பல்துலக்குதல் உள்ளிட்ட காலைக்கடன்களை முடித்துவிட்டு  (இது ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருக்கும் போகப் போக சரியாகிவிடும். உங்களாது செயல்பாடுகளுக்கேற்ப உடல் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொண்டுவிடும்) உடற்பயிற்சியோ அல்லது யோகாசனமோ அவரவர் விருப்பப்படி செய்யலாம். ஜிம்முக்கு செல்பவர்கள் செல்லலாம்.

உடற்பயிற்சி முடிந்த பின்னர் சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து, அவரவர் வழக்கப்படி திருநீற்றையோ திருமண்ணையோ அணிந்து கொண்டு, இறைவனின் படத்துக்கு முன்னர் திருவிளக்கேற்றுவது அவசியம். பெண்கள் தான் விளகேற்றவேண்டும். ஆண்கள் ஏற்றவேண்டியதில்லை என்றெல்லாம் நியதி எதுவும் கிடையாது. ஆண்களும் விளக்கேற்றலாம்.
ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கீனம் அனைத்திலும் தென்படும். சில நாட்கள் கழித்து அவை ஒரு கட்டுக்குள் வந்துவிடும்.

அப்போது உங்களுக்கு பிடித்த சுலோகங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். கந்த சாஸ்தி கவசம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாமம்… இவைகளில் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். அவரவர்க்கு இருக்கும் நேரம் மற்றும் சௌகரியங்களை பொறுத்து இதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

முறையாக திட்டமிட்டால் இவை அனைத்தும் சரியாக காலை 6.30 க்குள் முடித்துவிடலாம். அப்புறம் உங்கள் வழக்கமான் பணிகளை துவக்கலாம்.

அனைவருக்கும் 24 மணிநேரம் என்றிருக்க உங்களுக்கு மட்டும் (அதிகாலை எழும் பழக்கத்தால்) சற்று கூடுதல் நேரம் இருப்பது போல தோன்றும். எவ்ளோ பெரிய விஷயம் இது!

பணிச் சூழல் காரணமாக இதை கடைபிடிக்க முடியாதவர்கள் அதாவது நைட் ஷிப்ட்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பி.பி.ஒ.க்களில் பணிபுரிபவர்கள், தாங்கள் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்திகொள்ளவேண்டியது அவசியம். அவர்கள் பணி முடிந்து இல்லத்திற்கு திரும்பி, உறங்கியவுடன் மறுபடியும் எழுந்திருக்கும் நேரத்தை அந்த நாளின் தொடக்க நேரமாக கருதி இவற்றை செய்யலாம். தவறே அல்ல! அதில் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை உரிய நேரத்தை தேர்ந்தேடுத்து செய்யவேண்டும். மற்றபடி மனமிருந்தால் மார்க்கமுண்டு!

(முன்பெல்லாம் நான் இரவு விழித்திருந்து எழுதுவது, டி.வி. பார்ப்பது வழக்கம். நேரத்திற்கு எதையும் நான் செய்வதில்லை. மிகவும் கஷ்டப்பட்டு எனது பழக்கங்களை மாற்றிக்கொண்டு, நான் கடைபிடிக்க ஆரம்பித்து உங்களுக்கு இப்போது சொல்கிறேன். RIGHTMANTRA.COM துவக்கியதன் மிகப் பெரிய பலன் இது. தற்போது காலையில் சீக்கிரம் விழித்து வருகிறேன். அதன் மூலம் எழுத நேரம் கிடைப்பது ஒரு பக்கம், நான் நீண்ட நாட்களாக படிக்காமல் வைத்திருந்த நல்ல நூல்களை படிக்க முடிகிறது!)

சாஸ்திர ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் ஆராய்ச்சி ரீதியாகவும் கூட அதிகாலை எழுந்திருப்பது நலம் பயக்கும்.

அதிகாலை எழும் பழக்கத்தை ஒரு மூன்று மாதங்களுக்கு செய்து பாருங்களேன். அப்புறம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாக பார்ப்பீர்கள்.

“No one who can rise before dawn 360 days a year fails to make his family rich.” – Chinese proverb

[END]

Tuesday 9 October 2012

தீயவர்கள் சுகப்படுவதும் நல்லவர்கள் துன்பப்படுவதும் ஏன்?

ண்மையான இறை பக்தியுடன் ஒவ்வொரு நாளையும் சுவாசித்துக்கொண்டு எவருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு துன்பங்கள் ஏற்படுவதும், தீமையே உருவாய் நின்று நியாய தர்மங்களை தூக்கி போட்டு மிதித்து அக்கிரமங்களை கூசாமல் செய்பவர்கள் சந்தோஷத்துடனும் இந்த உலகில் வாழ்ந்து வருவதை நாம் அன்றாடம் பார்த்துவருகிறோம்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவன் மீது நமக்கு கோபமும் வருத்தமும் ஏற்படுவது உண்டு. “உன்னையே  அனுதினமும் நினைக்கிறேன். ஒரு புழு பூச்சிக்கு கூட கெடுதல் நினைத்ததில்லை நான். எனக்கு இப்படி ஒரு சோதனையா?” என்று நம் மனம் குமுறுவது உண்டு.

தீயவர்களின் சந்தோஷமும் சுகபோகமும் அவர்களின் கர்மவினையால் வந்தது என்றே வைத்துக்கொள்வோம். அப்போது, நல்லவர்களின் பக்திக்கும் ஒழுக்கத்துக்கும் மதிப்பே இல்லையா? எல்லாவற்றையும் கர்மவினை தான் தீர்மானிக்கிறது என்றால் இறைவன் எதற்கு? அவன் மீது பக்தி எதற்கு? கோயில்கள் எதற்கு? என்ற கேள்வி எழுவது இயல்பே.

இறைவனை பொறுத்தவரை அவன் மிகச் சிறந்த ஒரு நீதிபதி ஸ்தானத்தில் இருப்பவன். அவனை எதைக் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது. நமது உண்மையான பக்தியும், அன்பும் தவிர. அப்படி பக்தியையும் அன்பையும் நாம் கொடுக்கும்போது அவன் நியாயத்துக்கு புறம்பாக எந்தவித விதிவிலக்குகளையும் நமக்கு தருவதில்லை. ஆனால் தண்டனைகளை மாற்றியமைக்கிறான். அதன் கடுமையை குறைக்கிறான். அவன் அருள் கிடைக்கும்போது சராசரி மனிதர்களுக்கு தாங்க முடியாத துயரம் என்பது தாங்கிக்கொள்ளக்கூடிய ஒன்றாக மாறுகிறது.  தன்னையே அனுதினமும் துதித்து உத்தமர்களாக வாழ்ந்து வரும் மெய்யன்பர்களுக்கோ அந்த கடுமையே தெரியாத அளவிற்கு அவன் தாங்கிப் பிடிக்கிறான்.

நமது முந்தைய செயல்களின் விளைவால் (பெரும்பாலும் பூர்வஜென்மத்தில் ) தற்போது நமக்கு ஏற்படும் நிகழ்வுகளே ‘கர்மா’ எனப்படுவது. இதைத் தான் அறிவியலும் “Every action has equal and opposite reaction” என்று கூறுகிறது.

கர்மா மிகவும் வலிமையானது. அதிலிருந்து யாராலும் தப்ப இயலாது. கடவுள் நம்பிக்கை தீவிரமாக உடையவர்களுக்கு கர்மாவின் கடினம் தெரியாது. அல்லது அது ஏற்படுத்தும் தீய பலன்களின் தாக்கம் குறைவாக இருக்கும். மற்றவர்களுக்கு அது மிகவும் கடுமையாக இருக்கும்.

என் நண்பர் மகேஷ் என்பவர் நம்முடைய ONLYSUPERSTAR.COM தளத்தில் முன்பு அளித்த கதை ஒன்றை நமது பிரத்யேக ஓவியத்துடன் தருகிறேன்.

கர்மாவையும் கடவுள் அருளையும் இதை விட எளிமையாக, ஏற்றுக்கொள்ளும்படி விளக்க எவராலும் முடியாது. 

கர்ம வினையும் கடவுள் நம்பிக்கையும்!

30 வருடம் வாழ்ந்தவரும் இல்லை! 30 வருடம் வீழ்ந்தவரும் இல்லை . ஜோதிடத்தில் சனி ஒரு சுற்று வர 30 வருடங்கள் ஆகும். அதனால் எந்த ராசி ஆக இருபின்னும் 7 1/2 சனியின் பாதிபையோ அல்லது திசை மாற்றத்தையோ சந்தித்தே ஆக வேண்டும் . இது அனைவருக்கும் பொருந்தும் விதி.

ஒரு சிறு கதை உண்டு. சதீஷ், ரமேஷ் என இரு நண்பர்கள். சதீஷ் கடவுள் மேல் அளவற்ற அன்பு உடையவன். ரமேஷோ கடவுள் மேல் நம்பிக்கை துளியும் இல்லாதவன். தவிர மனம்போன போக்கின் படி செல்லும் தவறான ஒரு வாழ்க்கை வாழ்பவன். நண்பனை திருத்த சதீஷ் எவ்வளவோ முயன்றும் பயனில்லை. ஒரு நாள் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். சதீஷ் கோவிலுக்கு உள்ளே சென்று கடவுளை மனமார வேண்டுகின்றான்.  ரமேஷோ கோவிலுக்கு உள்ளே செல்லாமல், “நீ போய்விட்டு வா. நான் இங்கே காத்திருக்கிறேன்” என்று கூறியபடி வெளியே நின்று கொண்டு, காலால் மணலை தள்ளி விளையாடிக்கொண்டிருக்கின்றான்.

சதீஷ் கடவுளை சற்று நேரம் எடுத்துக்கொண்டு ஆலய தரிசனத்தை முடித்து இறைவனை வணங்கிவிட்டு திரும்பும்போது, எதிர்பாராதவிதமாக கோவில் மணியில் தலையை இடித்து கொண்டு நெற்றியில் அடிபட்டு, ஒரு சிறிய ரத்தகாயத்துடன் திரும்புகிறான்.

அங்கே வெளியே மணலில் விளையாடிக்கொண்டிருக்கும் ரமேஷோ மணலில் இருந்து ஒரு ஐநூறு ரூபா நோட்டை கண்டு எடுகின்றான். ரத்த காயத்துடன் திரும்பிய தன் நண்பனை பார்த்து சிரித்த ரமேஷ், “பார்த்தாயா ! கடவுளே கதி என இருக்கும் உனக்கு ரத்த காயம்; எந்த நம்பிக்கையும் இல்லாத எனக்கு 500 ரூபாய் நோட்டு! இதிலிருந்தே தெரியவில்லை கடவுள் இருக்கிறார் என்று சொல்வதெல்லாம் சுத்த பேத்தல்!” என சொல்லி சிரிகின்றான்.

சதீஷ் பதில் சொல்ல தெரியாது விழிக்கின்றான். இது போன்று அன்றாட வாழ்க்கையில் நமக்கு பல சமயம் நடப்பதுண்டு.

இந்த காட்சியை மேலே இருந்தபடி பார்த்துகொண்டு இருந்த அன்னை பார்வதி இறைவனிடம், ரமேஷின் கேலியை சுட்டி காட்டி விளக்கம் கேட்கிறார். பரமேஸ்வரன் புன்முறுவலுடன் சொல்கிறார் ,”பார்வதி! கர்ம வினைப்படி , இப்பொழுது சதீஷுக்கு பெரும் துன்பம் வர வேண்டிய நேரம். ஆனால் அவன் நானே கதி என நல்வழியில் வாழ்ந்ததால், அவனுக்கு வர இருந்த பெரிய துன்பம் சிறிய காயத்துடன் போயிற்று!! ராமேஷுக்கோ அவன் விதிப்படி மிக மிக அதிர்ஷ்டமான நேரமிது. பெரிய புதையலே கிடைக்க வேண்டிய தருணம். ஆனால் அவன் நல்வழியில் வாழாததால் வெறும் ஐநூறு ரூபாயோடு அவன் அதிர்ஷ்டம் முடிந்தது” என கூறினார்.

இறைவன் கூறுவதை நன்கு கவனியுங்கள். “ரமேஷ் நல்வழியில் வாழாததால் அவனுக்கு கிடைக்கவிருந்த மாபெரும் அதிர்ஷ்டம் நழுவியது” என்று தானே தவிர, “அவன் என்னை வணங்காததால்” என்று இறைவன் கூறவில்லை. (ஆண்டவனை நீங்க ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா என்பது ஒரு விஷயமல்ல. அவன் ஏற்றுக்கொள்ளும் நிலைமையில் உங்கள் செயல்பாடு இருக்கிறதா என்பதே விஷயம்!)

தீயவர்களுக்கும் நல்லவர்களுக்கும் இறைவன் அருள் செய்யும் விதம் எப்படி என்று இப்போது புரிந்திருக்குமே!

[END]

Monday 8 October 2012

யார் பெரிய பிச்சைக்காரர்கள்?

கோவிலுக்கு போகும்போதோ வரும்போதோ பிச்சையிடக்கூடாது என்று கூறுகிறார்களே. உண்மையில் எப்போது தான் நாம் பிச்சையிடுவது என்று நண்பர் ஒருவர் இங்கு கேட்டிருந்தார்.

ஆலயம் செல்கையில் பிச்சையிடவேண்டாம் என்று எந்த சாஸ்திரத்திலும் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் இரப்போர்க்கும் வறியவர்க்கும் பிச்சையிடுவது என்பது நமது பழக்க வழக்கங்களில் பாரம்பரியங்களில் ஒன்று. நமது வாழ்க்கை முறையோடு பின்னிப்பிணைந்த ஒன்று.

யோசித்துப் பார்த்தால் நாம் அனைவருமே ஒருவகையில்  பிச்சைக்காரர்கள் தான். கோவிலுக்கு சென்று நாம் இறைவனிடம் வைக்கும் கோரிக்கைப் பட்டியல் மட்டும் என்னவாம்? அவற்றை நாமே சம்பாதிக்க நம்மிடம் உடல் தெம்பும், வாய்ப்பும் இருக்கும்போது நாம் மட்டும் என்ன செய்கிறோம். ‘அதைக் கொடு’ ‘இதைக்கொடு’ என்று தானே இறைவனிடம் கேட்கிறோம். அது மட்டும் பிச்சையில்லையா? சொல்லப்போனால் சிலர் இறைவனிடம் பேரம் பேசுவது கூட உண்டு.

சற்று சிந்தித்தால் புரியும் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருப்பவர்களை விட நாம் தான் பெரிய பிச்சைக்காரர்கள் என்பது. அவர்கள் கேட்பதோ அதிகபட்சம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தான். ஆனால் நாம் நாகரீக உடைகளை அணிந்துகொண்டு உள்ளே சென்று இறைவனிடம் என்னென்ன கேட்கிறோம்? பொன், பொருள், வீடு, வாகனம், வேலை என நாமே சம்பாதிக்ககூடியவற்றை அல்லவா கேட்கிறோம். அப்போது இறைவன் என்ன நினைப்பான்.

நோயற்ற வாழ்வு, மன அமைதி, குடும்ப ஒற்றுமை, தேச நலன், போதுமென்ற மனம், எதையும் சந்திக்கக்கூடிய துணிவு இவை தான் நாம் இறைவனிடம் கேட்கவேண்டிய வஸ்துக்கள். ஆனால் பலர் இவற்றை மறந்தும்கூட கேட்பதில்லையே. இந்த பெரிய பிச்சைக்காரர்கள், கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருக்கும் அந்த சிறிய பிச்சைக்காரர்களை பார்த்து முகம் சுளிப்பது, பிச்சை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?
பிச்சை எடுக்காமல் எவராலும்  வாழமுடியாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான். கேட்கும் பொருள் தான் நபருக்கு நபர் வேறுபடுகிறது.
பிச்சை எடுக்காமல் எவராலும்  வாழமுடியாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான். கேட்கும் பொருள் தான் நபருக்கு நபர் வேறுபடுகிறது.

நாம் கொண்டாடும் வணங்கும் பல ஞானிகளும் தவபுருஷர்களும் கந்தலாடை உடுத்தி உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்தவர்கள் தான். எனவே பிச்சைக்காரர்களை ஏளனத்துடன் பார்க்கக்கூடாது. ஏன்… உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் படியளுக்கும் அந்த பரமேஸ்வரனே அன்னை அன்னபூரணியிடம் யாசகம் பெற்றவன் தான்.

ஒரு சிலருக்கு வேறு வகையான அணுகுமுறை எண்ணம் இதில் உண்டு. நாம் போடும் பிச்சை அது சிறியதோ பெரியதோ தகுதி உடையவர்களுக்கு தான் செல்கிறது என்பதற்கு என்ன உத்தரவாதம்? பிச்சை கேட்பவர்களில் உண்மையாக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் யார் அல்லது அதை ஒரு நல்ல தொழிலாக எண்ணி செய்து வருபவர்கள் யார் என்றெல்லாம் அந்த நேரத்தில் நம்மால் யோசிக்க முடியுமா?

பிச்சைக்காரர்களில் சோம்பேறிகள், சாமியார்களில் கபடவேடதாரிகள், சுய ஒழுக்கமில்லாத பூசாரிகள் – இவர்களெல்லாம் இன்று நேற்றல்ல காலகாலமாக இருந்து வருபவர்கள் தான். தற்போது நமக்கிருக்கும் ஊடக வெளிச்சத்தில் இவை அதிகம் வெளியே தெரிகிறது அவ்வளவு தான்.
ஒரு வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் தெரியுமா? நாம் உதவ நினைத்தால் அதை பெறுவதற்கு இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். யாசகம் பெறுபவர்கள் இல்லையெனில், இந்த உலகில் கொடுப்பவர்களுக்கு தான் என்ன மரியாதை இருக்கும்?
ஒரு வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் தெரியுமா? நாம் உதவநினைத்தால் அதை பெறுவதற்கு இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். யாசகம் பெறுபவர்கள் இல்லையெனில், இந்த உலகில் கொடுப்பவர்களுக்கு தான் என்ன மரியாதை இருக்கும்?
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஒருமுறை இங்கிலாந்து சென்றிருந்தபோது, அந்நாட்டு எம்.பி. ஒருவர் அவரிடம் கிண்டலாக அனைவர் மத்தியிலும் “உலகிலேயே உங்கள் நாட்டில் தான் பிச்சைக்காரகள் அதிகம் இருக்கிறார்களாமே?” என்று சிரித்தபடி கேட்க, அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், “ஆம்… எங்கள் நாட்டில் தான் இரக்க குணமுள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால்” என்றாராம். எத்துனை அருமையான ஒரு பதில்.

அந்தக் காலங்களில் முதுமையில் அனைத்தையும் இழந்து, பிள்ளைகளால் சுற்றங்களால் கைவிடப்பட்டு வாழ வழியற்றவர்கள் தான் பிச்சை எடுத்து வந்தனர். ஆனால் இப்போது அந்த வரைமுறை மாறிவிட்டது. அதை ஒரு லாபகரமான தொழிலாகவே செய்து வருபவர்கள் உண்டு. எனவே பாத்திரமறிந்து பிச்சையிடவேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அது போன்ற நேரங்களில் முதுமையாலும் நோயாலும் பீடிக்கப்பட்டு பிச்சை எடுப்பவர்கள் யார் என்று என்று கவனித்து அவர்களுக்கு உதவலாம் தவறில்லை. அதற்கும் நேரமில்லை என்றால் அனைவருக்கும் உங்களால் முடிந்த சில்லறைக்காசுகளை கொடுத்துவிட்டு செல்லாலாம்.
நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் சிறிது போனால் தான் என்ன?

“பிச்சையெடுப்பதை எந்த விதத்திலும் நான் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது அன்னதானம். நல்ல முறையில் செய்யப்பட்ட அல்லது ஹோட்டல்களில் வாங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை பசியால் வாடுபவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். மனிதன் போதுமென்று சொல்வது உணவை மட்டும் தான். வேறு எது கொடுத்தாலும் அவன் இன்னும் வேண்டும் வேண்டும் என்று தான் சொல்வான்.
இறுதியாக வள்ளுவர் கூறியதை தான் கூற விரும்புகிறேன்.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. (குறள் 1067)

(பொருள் : கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.)

இரப்பவர்களிடம் ‘இல்லை’ என்று கூறுவது எத்துனை இழிவானது என்று வள்ளுவர் கருதுவது இதிலிருந்தே தெரியவில்லையா?

[END]

Thursday 4 October 2012

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய....

லயங்கள் என்பவை ஆண்டவனின் அருள் கொட்டிக்கிடக்கும் மகாசமுத்திரம் போன்றவை. அவற்றில் இறங்கி முத்துக்களை அள்ளிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். கிளிஞ்சல்களை வாரிக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள். வெறும் கால்களை மட்டும் நனைத்துக்கொண்டு வருபவர்களும் இருக்கிறார்கள்.

சமுத்திரம் கேட்டதை எல்லாம் கொடுக்க தயாராக இருக்கிறது எனும்போது வெறும் கையுடன் திரும்புவது யார் குற்றம்? "கோவில்களுக்கு சென்றேன்; ஆனால் பலனில்லை" என்று புலம்புவர்களுக்கு பதில் இது தான்.

எதற்குமே ஒரு முறை இருக்கிறது சாரே....

நம்மில் பலர் கோவில்களுக்கு செல்லும் முறை எப்படி இருக்கிறது தெரியுமா?

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் அதிகாரி என்று வைத்துக்கொள்வோம். ரோட்டில் நடந்து செல்பவர் ஒருவர், அது உங்கள் நண்பராகவே இருக்கட்டும் - எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் - உங்களது அப்பாயின்மென்ட்டுக்காக ஏற்கனவே பலர் வெளியே காத்திருக்கும் சூழ்நிலையில் - உங்கள் அலுவலக நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் - தான்தோன்றித் தனமாக உங்கள் அறைக்குள் நுழைந்துவிடுகிறார். நீங்கள் எரிச்சலுறும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைகின்றன. போதாக்குறைக்கு உங்கள் நிறுவன ஊழியர்களிடமும் சக ஊழியர்களிடமும் பக்குவமற்று நடந்துகொள்கிறார். அது மட்டுமா போவதற்கு முன்னர் உங்கள் அலுவலகத்தை வேறு அசுத்தப்படுத்திவிட்டு  சென்றுவிடுகிறார். உங்களுக்கு எப்படி இருக்கும்? அடுத்த முறை அவரிடம் பேசுவீர்களா? பேசினாலும் உங்கள் அலுவலகத்திற்கு உள்ளே தான் விடுவீர்களா? (உங்களில் சிலருக்கு இது போன்று அனுபவம் ஏற்பட்டிருக்கக்கூடும்!)



மனுஷன் உங்களுக்கே இப்படி என்றால்... இந்த உலகையே கட்டிக்காக்கும் ஆண்டவனுக்கு? அவன் இருப்பிடத்திற்கு நீங்கள் எப்படி போகவேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்... ? யோசித்துப் பாருங்கள். இத்துனை நாட்கள் நீங்கள மிக மிக சாதாரணமாக நினைத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் எத்துனை முக்கியம் இது என்று இப்போது புரியும்.

ஆனா அவன் மனுஷன் இல்லையே. கருணைக் கடலாச்சே.  நாம என்ன தப்பு செஞ்சாலும் அவன் நம்மளை வரவேண்டாம்னு சொல்றதில்லே. துரத்துறதில்லே. அவனோட அருளை ஒவ்வொரு கணமும் வாரி வழங்க அவன் தயாராக இருக்கிறான். நாம் தான் அதை உதாசீனப்படுத்துகிறோம்.

அவனை போய் பார்த்து அவன் அருளை பெற, அந்த சமுத்திரத்தில் மூழ்கி முத்துக்களும் நவமணிகளும் எடுக்க... இதோ எனக்கு தெரிந்த சில எளிய வழிமுறைகள்.

இறைவனை ஆலயத்தில் தொழ அகத்தினாலும் புறத்தினாலும் தூய்மையானவர்களாக இருந்தாலே போதும் என்றாலும், கோவில் தரிசனத்திற்கு என்று பெரியோர்கள் வகுத்த விதிமுறைகளை பின்பற்றினால், அதற்குரிய பலன்கள் முழுமையாக கிட்டும்.

கோவில் தரிசனத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியவை :

  • எந்தக் கோவிலுக்கும் செல்வதற்கு முன்னால் அந்த கோவிலைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துவைத்துக்கொண்டு பின்னர் செல்லவேண்டும். முதன்முறையாக செல்லும் கோவில் என்றால், அந்த கோவிலைப் பற்றிய விபரங்களை அர்ச்சகரிடமோ அல்லது கோவில் அலுவலகத்திடமோ கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.
  • குளித்துவிட்டு தூய்மையான ஆடைகள் அணிந்து அவரவர் வழக்கப்படி திருநீறு அல்லது திருமண் ஆகியவற்றை அணிந்து கோவிலுக்கு செல்லவேண்டும்.
  • பெண்கள் இறுக்கமான ஆடைகள், டீ-ஷர்ட் உள்ளிட்டவைகளை அணிந்து கோவிலுக்கு செல்லவே கூடாது.
  • ஆண்கள் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்லவே கூடாது. நாம் போவது பொழுது போக்கிற்கு அல்ல. நமது உடைகள் நாகரீகமாக இருப்பது மிக மிக அவசியம்.
  • உள்ளே செல்லும் முன், அவரவர் மொபலை சுவிச் ஆஃப் செய்யவேண்டும் அல்லது சைலண்டில் வைக்க வேண்டும்.
  • கோவில் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கவேண்டும்.
  • ஆலயத்தில் கை, கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் வசதி இருக்குமானால நமது கை, கால்களை கழுவிக்கொள்ளவேண்டும்.
  • மலர்கள், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழைப் பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அர்ச்சனைக்காக வாங்கி செல்லவேண்டும். (வாழைப்பழத்தில் புதிதாக வந்திருக்கும் மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம் மற்றும் பச்சை நாடன் கூடவே கூடாது.)
  • சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டி பைகள் மற்றும் கேரி பேக்குகளை தவிர்க்கவேண்டும். நமது வீட்டிலிருந்து அர்ச்சனைத் தட்டோ, சிறு மூங்கில் கூடையோ, காகிதப் பையோ அல்லது துணியினால் ஆன பையையோ கொண்டு சென்று, அதில் மேற்படி மங்கலப் பொருட்களை எடுத்துச் செல்லவும். பையும் மாறாது. உங்கள் பொருள் உங்களுக்கே கிடைக்கும். 


  • கோவிலுக்கு உள்ளே உள்ள விநாயகரை முதலில் தரிசித்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும். பிரார்த்தனை நல்லபடியாக நிறைவற, ஆலய தரிசனம் முழுமையான பலன் தர தும்பிக்கையான் அருளை வேண்டிக்கொள்ளவேண்டும்.
  • பின்னர் நந்தி, கருடன் மற்றும் மயில் உள்ளிட்ட பிரதான வாகனங்களை வணங்கவேண்டும்.
  • மூலஸ்தானத்துக்கு வெளியே நிற்கும் துவார பாலகர்களை (இறைவனின் மெய்க்காப்பாளர்கள்) மானசீகமாக வணங்கி இறைவனை தரிசிக்க அவர்களது அனுமதியை பெறவேண்டும்.
  • மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள மற்ற மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.
  • சண்டேசுவரரை அமைதியாக வணங்க வேண்டும். கைகளை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது.

  • ஆலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்டவைகளை மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும். கிழே சிந்துதல் கூடாது. நாம் அணிந்தது போக கைகளில் மிகுதியாக உள்ளவற்றை ஒரு பேப்பரில் மடித்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். அல்லது அதற்கு என்று வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் போடலாம். கண்ட கண்ட இடத்தில் அவற்றை போடுதல் கூடாது.
  • அதே போல், விளக்கேற்றிய பின்னர் கைகளில் எண்ணெய் படிந்திருந்தால் அதை நாம் கொண்டு சென்ற துணியில் துடைத்துக்கொள்ளவேண்டுமே தவிர கோவில் சுவற்றில் தேய்த்தல் கூடாது.
  • கோவில் சுவற்றில் கிறுக்குதல், பெயரை எழுதுதல், பரீட்சை எண்ணை எழுதுதல் இவை அனைத்தும் மிகப் பெரிய தவறு. உங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லவேண்டுமேயன்றி சுவற்றில் அல்ல.
  • ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும். வலம் வருகையில் கைகளை வீசிக்கொண்டு நடக்காது, பொறுமையாக இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி கைகளை கூப்பிய நிலையில் வணங்க வேண்டும்.
  • கர்ப்ப க்ரஹத்தில் மேல் உள்ள விமானத்தை கைகளை கூப்பி வணங்கவேண்டும்.
  • இறைவனைத் தவிர ஆலயத்தில் வேறு எவரையும் வணங்கக்கூடாது.
  • கோவிலில் வம்பு பேசுதல், உலக விஷயங்களை, லௌகீக விஷயங்களை பேசுதல் அறவே கூடாது.
  • அந்தந்த கோவிலுக்கு செல்லும்போது அந்தந்த கடவுளரின் ஸ்லோகத்தை ஸ்தோத்திரங்களை பாக்களை பக்தியுடன் கூறிக்கொண்டே வலம் வரவேண்டும்.
  •  கலகலவென சிரித்தல், அதிர்ந்து பேசுதல், கூச்சல் போடுதல், மற்றவர்களை கடுகடுத்தல், அதிகாரம் செய்தல் இவை கூடவே கூடாது.
  • பிறரின் உடைகளை, ஆபரணங்களை பார்த்து பொறாமைப்படுதல் பெரிய தவறு.
  • மற்றவர்களை தரிசிக்க விடாது இடையூறாக இருப்பது கூடாது.
  • வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சுலபமாக தரிசனம் செய்ய உதவவேண்டும்.
  • இலகு தரிசனத்திற்க்காக கையூட்டு கொடுத்தல் கூடவே கூடாது.
  • அர்ச்சகருக்கு தட்டில் உங்கள் தட்சணையை போடுவது தவறல்ல. ஆனால் ஆலயத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தால் ஆலய உண்டியலில் உங்கள் காணிக்கையை போடவும்.

  • கோவிலில் பிரசாதம் அளித்தால் அதை சாப்பிட்டவுடன் அந்த இலையையோ அல்லது தொன்னையையோ கண்ட இடத்தில் போடாமல், அதற்கென உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும்.
  • கொடிமரத்தித்திற்கு அப்பால் அதற்கு கீழே மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தில் வேறு எங்கும் கீழே விழுந்து வணங்குதல் கூடாது.
  • கோவிலில் பசு கொட்டில் இருந்தால், அதை பராமரித்து வருபவர்களிடம் அனுமதி பெற்றே பசுக்களுக்கு பழம், கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுக்கவேண்டும். (அவங்களுக்கு தான் அவைகளோட உணவு முறைகள் மற்றும் ஒவ்வாமை பற்றி தெரியும்.)
  • வடக்கு திசை நோக்கி சற்று அமர்ந்து இறைவனின் பெயரை கூறி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.
  • சிவாலயத்தின் குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம். தவறு அல்ல.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். ஆலய தரிசனத்தின் பலன்களை முழுமையாக பெறுங்கள்.

---------------------------------------------------------------------
அடுத்து....
கோவிலுக்கு செல்லும்போது யாசகம் கேட்பவர்களுக்கு பிச்சையிடலாமா? கூடாது என்று சிலர் சொல்கிறார்களே... இது பற்றி பெரியோர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்? விரிவான பதிவு!
---------------------------------------------------------------------

[END]

·        

Tuesday 2 October 2012

வேலையில் ப்ரோமோஷன் வேண்டுமா?

ரு சிலருக்கு திறமை இருந்தும் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் அதற்க்கேற்ற பதவி இல்லாது இருப்பார்கள். ஆன்மீக ரீதியாக இதற்கு பிரார்த்தனைகள் விசேஷ ஸ்லோகங்கள் இருக்கின்றன என்றாலும் கீழ்கண்ட விஷயங்களையும் கவனத்தில் கொண்டு அவற்றை கடைபிடித்து பின்னர் ஆன்மீக ரீதியிலான விஷயங்களுக்கு வருவோம்.
நாம் கடவுளிடம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம். ஓ.கே.?
அணுகுமுறையை மாற்றுங்கள் – அனைத்தும் மாறும்!

1) “அவனுக்கு ஒண்ணுமே தெரியாது சார்.. ஆனா பாருங்க ப்ரோமோஷன் மேல ப்ரோமோஷன் வாங்கிட்டு போய்ட்டான். நான் நாயா உழைக்கிறேன். ஆனா அதுக்கு மதிப்பு கிடையாது” என்று குமுறுவார்கள். அங்க தான் இருக்கு விஷயமே… நாய் மாதிரி உழைக்கவேண்டாமே. மனுஷனா உழைச்சால் போதுமே.

2) நீங்க எவ்ளோ நேரம் வேலை செய்றீங்கன்னு மேலோட்டமா தான் பார்ப்பாங்க. ஆனா எப்படி வேலை செய்றீங்கன்னு தான் எல்லாரும் கவனிப்பாங்க. உங்க பாஸ் உட்பட.

3) சரியான நேரத்துக்கு காலையில வர்றது, தேவைப்படும்போது கொஞ்சம் கூட இருந்து வேலையை முடிச்சு தர்றது, அடிக்கடி லீவ் போடாம இருக்கிறது இதெல்லாம் ரொம்ப முக்கியம். பொதுவாகவே அலுவலகத்துல நம்மோட மைனஸ் எதுவோ அதையே அங்கே இருக்குற மத்த புத்திசாலிகள் தங்களோட பிளஸ்ஸா மாத்திக்குவாங்க. உங்களை ஓவர்டேக் பண்ணி போய்ட்டே இருப்பாங்க. இத்துணைக்கும் உங்க கூட நல்லா பேசுவாங்க. நல்ல பழகுவாங்க. So, உங்க மைனஸை நீங்கள் அடையாளம் கண்டு அதை திருத்திக்கொள்ளவேண்டும்.

4) நீங்கள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உங்கள் நிறுவனம் தருகிறதா என்பதை இதை நீங்கள் முதலில் உறுதிப் படுத்திக்கொள்ளுங்க. இன்னைக்கு நிறைய கம்பெனிகள் அதற்க்கு நல்ல ஸ்கோப் கொடுக்குறாங்க. நாம தான் பயன்படுத்திக்க தவறிடுறோம்.

5) உங்களால் என்ன செய்யமுடியும் அதை மிக சிறப்பாக இப்போது இருக்கும் நிலையில் செய்யவும்.

6) முக்கியமா அலுவலக நேரத்துல பேஸ்புக், இணையங்கள், பர்சனல் விஷயங்கள் பார்ப்பதை தவிர்க்கவும். பிரேக் டைமில் அவற்றை பார்க்கலாம். இல்லை வேலை முடிந்தபின்னர் அதற்கு சற்று நேரம் ஒதுக்கி பாருங்கள். (இங்கே நிறைய பேர் கோட்டை விடுவாங்க. நீங்க இங்கே ஸ்கோர் பண்ணுங்க.)

7) நீங்க சூப்பரா ஃபர்பார்ம் பண்ற விஷயம் முதல்ல எல்லாருக்கும் தெரியுதா? நம்மளை பத்தி நாம் பேச வேண்டாம். ஆனா நாம செய்ற வேலை நம்மைப் பத்தி பேசவைக்கணும். அது தான் முக்கியம். உங்களோட சுப்பீரியர்ஸ் கிட்டே நல்ல அணுகுமுறை இருக்கட்டும்.

8) மெரிட்டை பேஸ் பண்ணி தான் ப்ரோமோஷன் என்பது இருக்கணும். ஆனா நிறைய ஆபீஸ்ல அது பாலிடிக்ஸை வெச்சு தான் நடக்குது. இதை நாம எப்படி எதிர்கொள்றது?

அவரை கேட்டா அவர் நிச்சயம் இதை முடிச்சு கொடுப்பாருப்பா… என்று உங்களை பற்றி ஒரு மதிப்பீடு இருப்பது அவசியம். உங்க கூட வேலை செய்றவங்க, உங்க மேலதிகாரிகள் மற்றும் உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க இவங்களோட ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் முக்கியம். அவங்களுக்கு கூடுமானவரை உதவி செய்ங்க. அவங்க சுமையை குறைக்க உதவி பண்ணுங்க. முக்கியமா உங்க நிறுவனத்தோட நிகழ்ச்சிகள்ல நீங்க அவசியம் கலந்துக்கனும்.

9) மேன்மேலும் வளரும் ஆர்வம் உங்களுக்கு இருப்பதை உணர்த்துங்கள். உங்கள் வளர்ச்சியிலும் ப்ரோமொஷனிலும் உங்களுக்கு அக்கறை இருப்பதை உணர்த்துங்கள். அதே சமயம் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ப்ரோமோஷன் தாமதமானால் அதுக்காக விரக்தியடையக் கூடாது. இப்போ பார்த்துக்கிட்டுருக்கிற வேலையை இன்னும் சிறப்பாக செய்யுங்கள். இதைவிட சிறப்பாகே எவரும் செய்ய முடியாது என்று கூறுமளவிற்கு உங்கள் பணி இருப்பது அவசியம்.

10) எல்லாவற்றுக்கும் மேலாக மேலதிகாரிகளை பற்றியோ அல்லது உங்கள் சீனியர்களைப் பிறரிடம் புறம்பேசுவதை அறவே தவிர்க்க வேண்டும். புறம் பேசுவதே பலருக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை தட்டி பறித்துவிடுகிறது. தவிர, அது நமது குடுமியை மற்றவரிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

மேற்கூறிய விஷயங்களை கடைபிடிக்கும் அதே நேரத்தில் இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். குறுக்கு வழிகளை பின்பற்றி பதவி உயர்வு பெறுபவர்களை பார்த்து சஞ்சலப்படவேகூடாது. அவ்வாறு குறுக்கு வழிகளால் பதவி உயர்வு பெறுபவர்கள் அதற்கு கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாது அவர்களது உயர்வு தற்காலிகமானதாகவே இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் வளரவே முடியாது. ஆனால் திறமையினால் வளர்ச்சி பெருபவர்களது உயர்வு சீராக இருக்கும். இது நிதர்சனமான உண்மை.


இப்படி அலுவலகத்தில் உங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டாலே உங்கள் பணி உயர்வு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது போலத் தான்.

தவிர முடிந்தால் தினமும் கீழ்கண்ட ஸ்லோகத்தை பக்தியுடன் சிரத்தையாக உச்சரித்து வாருங்கள்.

மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – அபிராமி அந்தாதி


உங்கள் முயற்சியும் திருவருளும் சேர, அப்புறம் என்ன? ப்ரோமோஷன் தான்!

[END]

Monday 1 October 2012

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

--------------------------------------------------------------------
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
- திருஞானசம்பந்தர்

பொருள் : திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்லவந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, `என் அடியவன் உயிரைக் கவராதே` என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.
--------------------------------------------------------------------
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று!"

"நன்று என்பது எது?" என்று பரமேஸ்வரனும் உமையவளும் கேட்டபோது அவ்வை சொன்னது இது.

ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. 32 பற்களுக்கிடையே நாக்கு கடிபடமால் வாழ்வது எப்படியோ அப்படித்தான் நமது வாழ்க்கையின் போக்கும் இருக்கிறது. எண்ணற்ற துன்பங்களும் பிரச்னைகளும் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மை சூழ்ந்திருக்க, நாம் அவற்றில் சிக்காமல் லாவகமாக நமது வாழ்கை பயணத்தை தொடர இறைவனின் திருவருள் மிகவும் அவசியம்.
"இப்படித் தான் எனது வாழ்க்கை இருக்கும். No problem. No worries" என்று எவராலும் அறுதியிட்டு கூற முடியாது. காரணம், மனித வாழ்க்கை அத்துனை நிச்சயமற்றது. ஒரு நொடியில் ஒரே ஒரு நொடியில் வாழ்க்கையே தலைகீழாக பலருக்கு மாறிய தருணங்கள் அநேகம் உண்டு அன்றாடம் உண்டு இந்த உலகில். செய்தித் தாள்களை பார்த்தால் புரியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் எந்த வித துன்பங்களும் நேராது, நாமும் நமது லட்சியப் பயணத்தில் வெற்றி நடை போட்டு நிம்மதியுடனும் சந்தோஷமுடனும் வாழ ஆலய தரிசனம் அத்துனை முக்கியம்.

கடவுள் எங்கும் இருக்கிறார் எனும்போது அவரை ஆலயத்தில் போய் தொழ வேண்டிய அவசியம் என்ன என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். எங்கும் இறைவன், எதிலும் இறைவன் என்பதை உணர்ந்து ஒரு பரிபக்குவ நிலையில் உள்ள  மகா புருஷர்களுக்கு மட்டுமே மேற்படி கேள்வி பொருந்தும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு?

பூமிக்கடியில் எங்கும் தண்ணீர் உள்ளது. அப்படியிருக்கும் போது ஏன், தண்ணீரை நாம் பூமியில் துளையிட்டு அதை பைப்பில் ஏற்றி மேலே OVERHEAD TANK இல் சேர்த்து வைக்கிறோம்? நமது அவசரத்திற்கு தேவைப்படும்போது அதை பயன்படுத்தத் தானே? அது போலத் தான் திருவருளும்.
இறைவன் நிச்சயம் நாம கேட்கும்போது கேட்குறதை கொடுக்குறவன் தான். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்று அதனால் தானே திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். ஆனால், கேட்பதற்கு நமக்கு தகுதி வேண்டாமா? கோவிலுக்கு அனுதினமும் சென்று அவனை வழிபடுவதன் மூலம் அந்த தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள முடியும். நிறையே பேருக்கு தங்களுக்கு ஒரு தேவை அல்லது பிரச்னைன்னு வரும்போது தான் கடவுளோட ஞாபகமே வருது. மனுஷங்ககிட்டே தான் தேவை அறிந்து பழகுகிறோம் என்றால் கடவுளிடமுமா?
இறைவன் நிச்சயம் நாம கேட்கும்போது கேட்குறதை கொடுக்குறவன் தான். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்று அதனால் தானே திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். ஆனால், கேட்பதற்கு நமக்கு தகுதி வேண்டாமா?
நாம கேட்கும்போது அவன் தன்னோட அருளை தரனும் என்றால் நாம் அதற்கு தகுதி பெறவேண்டும்.

வங்கியில் பணம் போட்டு வெச்சிருந்தாத் தானே அவசரத்துக்கு போய் எடுக்க முடியும்? அக்கவுண்ட்ல பணமே இல்லாம எப்படி சார் எடுக்கிறது? பணமாவது பரவாயில்லே... கடனை உடனை வாங்கி நம்ம தேவையை அப்போதைக்கு சமாளிச்சிக்கலாம். ஆனா, திருவருள்? அது அவனா கொடுத்தாத் தான் உண்டு. அதை யாரும் கடன் கொடுக்க முடியாது.

எனவே புண்ணிய காரியங்களின் வாயிலாகவும் திருக்கோவில் தரிசனங்கள் வாயிலாகவும் நாம் இறைவின் திருவருளை சேமித்து வரவேண்டும். அப்போது தான் அதை சமயத்தில் உபயோகிக்க முடியும்.
கோவிலுக்கு செல்வதன் அவசியத்தை தாத்பரியத்தை நமது முன்னோர்களும் சமயப் பெரியவர்ளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விரிவாக விளக்கியுள்ளார்கள். எனவே அந்த சப்ஜெக்டில் நான் டீப்பாக செல்ல விரும்பவில்லை.

கோவிலுக்கு செல்வதன் அவசியத்தை சொல்லவேண்டிய அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புறேன். பாப காரியங்களை கொஞ்சம் கூட கூசாம செய்துகிட்டு இந்தப் பக்கம் கோவிலுக்கு போறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுபவர்கள் சொல்லாலும் செயலாலும் எண்ணத்தினாலும் யாருக்கும் எந்த வித தீங்கும் செய்யவே கூடாது. அப்போது தான் உங்களுக்கு திருவருள் முழுமையாக கிட்டும். பாப காரியங்கள் என்று கூறப்படுபவற்றை மறந்து கூட செய்ய கூடாது.

(பாப காரியங்கள் எவை எவை? கீழ்கண்ட பதிவை பார்க்க)

http://www.livingextra.com/2012/07/blog-post.html

ஓகே. கோவிலுக்கு செல்வது என்று முடிவு செய்துவிட்டீர்கள். எந்த நாள் எப்போது செல்வது?

தினசரி கோவிலுக்கு செல்வது நன்று. அப்படி தினசரி முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செல்வது நல்லது. தங்கள் ராசி நட்சத்திர பலன்களுக்கு ஏற்ப வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சென்று வருவது சிறப்பு.

அல்லது தங்களுக்கு இயன்ற நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வருவது சிறப்பு. வாரம் ஒரு முறை தனியாகவும், மாதம் ஒரு முறை குடும்பத்துடனும் சென்று வருவதை வழக்கமாக கொள்ளலாம்.

சென்னைவாசிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த பரபரப்பான சென்னையிலும் அதை சுற்றிலும் தொன்மை வாய்ந்த ஆலயங்கள் பல இருக்கின்றன. திருவொற்றியூர் ஒற்றீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர், திருவேற்காடு வேதபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர், திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள்,  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில், என்று பல புராதன ஆலயங்கள் உண்டு.
மேற்படி ஆலயம் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து, வாரம் ஒரு முறை காலையோ மாலையோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதை வழக்கமாக கொள்ளவும். மறக்காம ஒரு ஜோடி நெய் விளக்கோ அல்லது எள் முடிச்சு போட்ட நல்லெண்ணெய் விளக்கோ (சனிக்கிழமையா இருந்தா) ஏத்துங்க. அப்புறம் பாருங்க உங்களைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள். தன்னம்பிக்கை, தைரியம், மனோதிடம் இதெல்லாம் உங்க கிட்டே கூடிக்கிட்டே போகும். எல்லாத்துக்கும் மேல ஒரு தேஜஸ் உருவாகும். (உங்களோட செயல்கள் சின்சியரா இருக்கும் பட்சத்தில்.)

இதையெல்லாம் ஞாபகம் வெச்சிக்கிற அதே நேரம் இன்னொரு விஷயமும் ஞாபகம் வெச்சிக்கோங்க. நல்லவனா இருப்பதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் எதுவுமில்லை. உங்கள் மேல் உள்ள தவறுகளை உணர்ந்து அவற்றை களையும் மனவுறுதி மேற்கொண்டு, பின்னரே கோவிலின் படிகளை மிதிக்கவும்.

TIPS : கோவிலுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்வது மிகவும் முக்கியம். அப்படி அர்ச்சனை செய்யும்போது உங்கள் பெயருக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கோ, நண்பர்கள் பெயருக்கோ அர்ச்சனை செய்யவும். சுவாமி பெயருக்கு வேண்டாம். அர்ச்சனைக்கு கூறப்படும் ஸ்லோகத்தில் தோஷ நிவர்த்தி குறித்த பதமும் உண்டு. இறைவனுக்கு ஏது தோஷம்? எனவே, சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

அடுத்த பதிவில்....

கோவிலில் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் மற்றும் இதர முக்கிய விஷயங்கள்

[END]