Monday 8 October 2012

யார் பெரிய பிச்சைக்காரர்கள்?

கோவிலுக்கு போகும்போதோ வரும்போதோ பிச்சையிடக்கூடாது என்று கூறுகிறார்களே. உண்மையில் எப்போது தான் நாம் பிச்சையிடுவது என்று நண்பர் ஒருவர் இங்கு கேட்டிருந்தார்.

ஆலயம் செல்கையில் பிச்சையிடவேண்டாம் என்று எந்த சாஸ்திரத்திலும் கூறியிருப்பதாக எனக்கு தெரியவில்லை. சொல்லப்போனால் இரப்போர்க்கும் வறியவர்க்கும் பிச்சையிடுவது என்பது நமது பழக்க வழக்கங்களில் பாரம்பரியங்களில் ஒன்று. நமது வாழ்க்கை முறையோடு பின்னிப்பிணைந்த ஒன்று.

யோசித்துப் பார்த்தால் நாம் அனைவருமே ஒருவகையில்  பிச்சைக்காரர்கள் தான். கோவிலுக்கு சென்று நாம் இறைவனிடம் வைக்கும் கோரிக்கைப் பட்டியல் மட்டும் என்னவாம்? அவற்றை நாமே சம்பாதிக்க நம்மிடம் உடல் தெம்பும், வாய்ப்பும் இருக்கும்போது நாம் மட்டும் என்ன செய்கிறோம். ‘அதைக் கொடு’ ‘இதைக்கொடு’ என்று தானே இறைவனிடம் கேட்கிறோம். அது மட்டும் பிச்சையில்லையா? சொல்லப்போனால் சிலர் இறைவனிடம் பேரம் பேசுவது கூட உண்டு.

சற்று சிந்தித்தால் புரியும் கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருப்பவர்களை விட நாம் தான் பெரிய பிச்சைக்காரர்கள் என்பது. அவர்கள் கேட்பதோ அதிகபட்சம் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் தான். ஆனால் நாம் நாகரீக உடைகளை அணிந்துகொண்டு உள்ளே சென்று இறைவனிடம் என்னென்ன கேட்கிறோம்? பொன், பொருள், வீடு, வாகனம், வேலை என நாமே சம்பாதிக்ககூடியவற்றை அல்லவா கேட்கிறோம். அப்போது இறைவன் என்ன நினைப்பான்.

நோயற்ற வாழ்வு, மன அமைதி, குடும்ப ஒற்றுமை, தேச நலன், போதுமென்ற மனம், எதையும் சந்திக்கக்கூடிய துணிவு இவை தான் நாம் இறைவனிடம் கேட்கவேண்டிய வஸ்துக்கள். ஆனால் பலர் இவற்றை மறந்தும்கூட கேட்பதில்லையே. இந்த பெரிய பிச்சைக்காரர்கள், கோவிலுக்கு வெளியே உட்கார்ந்திருக்கும் அந்த சிறிய பிச்சைக்காரர்களை பார்த்து முகம் சுளிப்பது, பிச்சை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?
பிச்சை எடுக்காமல் எவராலும்  வாழமுடியாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான். கேட்கும் பொருள் தான் நபருக்கு நபர் வேறுபடுகிறது.
பிச்சை எடுக்காமல் எவராலும்  வாழமுடியாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவருமே பிச்சைக்காரர்கள் தான். கேட்கும் பொருள் தான் நபருக்கு நபர் வேறுபடுகிறது.

நாம் கொண்டாடும் வணங்கும் பல ஞானிகளும் தவபுருஷர்களும் கந்தலாடை உடுத்தி உஞ்சவிருத்தி செய்து வாழ்ந்தவர்கள் தான். எனவே பிச்சைக்காரர்களை ஏளனத்துடன் பார்க்கக்கூடாது. ஏன்… உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் படியளுக்கும் அந்த பரமேஸ்வரனே அன்னை அன்னபூரணியிடம் யாசகம் பெற்றவன் தான்.

ஒரு சிலருக்கு வேறு வகையான அணுகுமுறை எண்ணம் இதில் உண்டு. நாம் போடும் பிச்சை அது சிறியதோ பெரியதோ தகுதி உடையவர்களுக்கு தான் செல்கிறது என்பதற்கு என்ன உத்தரவாதம்? பிச்சை கேட்பவர்களில் உண்மையாக பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளவர்கள் யார் அல்லது அதை ஒரு நல்ல தொழிலாக எண்ணி செய்து வருபவர்கள் யார் என்றெல்லாம் அந்த நேரத்தில் நம்மால் யோசிக்க முடியுமா?

பிச்சைக்காரர்களில் சோம்பேறிகள், சாமியார்களில் கபடவேடதாரிகள், சுய ஒழுக்கமில்லாத பூசாரிகள் – இவர்களெல்லாம் இன்று நேற்றல்ல காலகாலமாக இருந்து வருபவர்கள் தான். தற்போது நமக்கிருக்கும் ஊடக வெளிச்சத்தில் இவை அதிகம் வெளியே தெரிகிறது அவ்வளவு தான்.
ஒரு வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் தெரியுமா? நாம் உதவ நினைத்தால் அதை பெறுவதற்கு இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். யாசகம் பெறுபவர்கள் இல்லையெனில், இந்த உலகில் கொடுப்பவர்களுக்கு தான் என்ன மரியாதை இருக்கும்?
ஒரு வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் தெரியுமா? நாம் உதவநினைத்தால் அதை பெறுவதற்கு இங்கு அநேகம் பேர் இருக்கிறார்கள். யாசகம் பெறுபவர்கள் இல்லையெனில், இந்த உலகில் கொடுப்பவர்களுக்கு தான் என்ன மரியாதை இருக்கும்?
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் ஒருமுறை இங்கிலாந்து சென்றிருந்தபோது, அந்நாட்டு எம்.பி. ஒருவர் அவரிடம் கிண்டலாக அனைவர் மத்தியிலும் “உலகிலேயே உங்கள் நாட்டில் தான் பிச்சைக்காரகள் அதிகம் இருக்கிறார்களாமே?” என்று சிரித்தபடி கேட்க, அதற்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன், “ஆம்… எங்கள் நாட்டில் தான் இரக்க குணமுள்ளவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பதால்” என்றாராம். எத்துனை அருமையான ஒரு பதில்.

அந்தக் காலங்களில் முதுமையில் அனைத்தையும் இழந்து, பிள்ளைகளால் சுற்றங்களால் கைவிடப்பட்டு வாழ வழியற்றவர்கள் தான் பிச்சை எடுத்து வந்தனர். ஆனால் இப்போது அந்த வரைமுறை மாறிவிட்டது. அதை ஒரு லாபகரமான தொழிலாகவே செய்து வருபவர்கள் உண்டு. எனவே பாத்திரமறிந்து பிச்சையிடவேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

அது போன்ற நேரங்களில் முதுமையாலும் நோயாலும் பீடிக்கப்பட்டு பிச்சை எடுப்பவர்கள் யார் என்று என்று கவனித்து அவர்களுக்கு உதவலாம் தவறில்லை. அதற்கும் நேரமில்லை என்றால் அனைவருக்கும் உங்களால் முடிந்த சில்லறைக்காசுகளை கொடுத்துவிட்டு செல்லாலாம்.
நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்கும் சிறிது போனால் தான் என்ன?

“பிச்சையெடுப்பதை எந்த விதத்திலும் நான் ஊக்குவிக்க விரும்பவில்லை” என்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது அன்னதானம். நல்ல முறையில் செய்யப்பட்ட அல்லது ஹோட்டல்களில் வாங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை பசியால் வாடுபவர்களுக்கு வாங்கி கொடுக்கலாம். மனிதன் போதுமென்று சொல்வது உணவை மட்டும் தான். வேறு எது கொடுத்தாலும் அவன் இன்னும் வேண்டும் வேண்டும் என்று தான் சொல்வான்.
இறுதியாக வள்ளுவர் கூறியதை தான் கூற விரும்புகிறேன்.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. (குறள் 1067)

(பொருள் : கையில் உள்ளதை மறைத்து இல்லை என்போரிடம் கையேந்த வேண்டாமென்று கையேந்துபவர்களையெல்லாம் கையேந்திக்கேட்டு கொள்கிறேன்.)

இரப்பவர்களிடம் ‘இல்லை’ என்று கூறுவது எத்துனை இழிவானது என்று வள்ளுவர் கருதுவது இதிலிருந்தே தெரியவில்லையா?

[END]

3 comments:

  1. ஏன் நீண்ட நாள் கேள்விக்கு இன்று பதில் கிடைத்து உள்ளது ,நன்றி சுந்தர் அவர்களே

    ReplyDelete
  2. Wow. Lovely Article.

    This is the first time I am commenting here in this site. I loved the example you quoted - with Mr. Radhakrishnan, our honourable former president.

    Keep it up!

    ReplyDelete
  3. good article thanks sir.

    ReplyDelete